மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் திருமாறன். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று ஊர் திரும்பிய அவர் வீட்டை திறக்க முற்பட்டபோது காம்பவுண்ட் கேட் மற்றும் வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாறன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த மரபீரோ மற்றும் இரும்பு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கலைந்து கிடந்ததுடன், பீரோவில் வைத்திருந்த 22 பவுன் நகைகள், பணம், பூஜை அறையில் இருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமாறன் வீட்டிற்க்கு எதிரே உள்ள ஹரிபிரசாத்தின் வீட்டில் திருடர்கள் திருட முயற்சித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீர்காழி நகரில் போலீசாரின் இரவு ரோந்து பணியில் ஏற்பட்டுள்ள மெத்தனப்போக்கால் தொடர்ந்து திருட்டுக்கள் நடைபெறுவதாகவும் இதனை தடுக்க மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.