கடந்த மே 4-ம்தேதி அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கத்தரி வெயிலின் தாக்கத்தில் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்மனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், அனந்தமங்கலம், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அபிஷேக கட்டளையைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் மனைவி உமா (50) என்பவர் மழை பெய்து கொண்டிருந்தபோது திருக்கடையூர் அரசு விதை பண்ணை பகுதியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்த தனது சினை மாட்டை கட்டுவதற்காக சென்று உள்ளார்.
அப்போது இடி தாக்கி சினை மாடு உயிரிழந்தது. இடி விழுந்த போது ஏற்பட்ட அதிர்வில் உமா வயலிலேயே மயங்கி சரிந்தார். தொடர்ந்து உமாவை அவரது உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.