மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கமேடு, மேல செங்கமேடு, கீழ செங்கமேடு, உச்சிமேடு எல்.ஐ.சி காலனி உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் முழுமையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.மேலும் பகுதி நேரத்தில் வழங்கப்பட்டு வந்த உப்பு நீரும் கடந்த சில தினங்களாக வழங்கப்படாத நிலையில் அடுத்தடுத்து கிராமங்களுக்கு சென்று குடிநீர் கொண்டு வரும் நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டனர். இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த செங்கமேடு, மேல செங்கமேடு, கீழ செங்கமேடு, உச்சிமேடு எல்.ஐ.சி காலனி பகுதி மக்கள் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து செங்கமேட்டில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களின் போராட்டத்தால் சீர்காழி மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.