தமிழ்நாட்டில் வீடுகளில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்களை குறிவைத்து தொடர்ந்தது குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் காவல்துறை பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா உத்தரவின்படி, வீடுகளில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்கள் குறித்து காவல்நிலையம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சீனியர் சிட்டிசன் ரெஜிஸ்டர் ஒன்றை நிர்வாகித்து, அதன்படி அந்த மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை போலீஸார் சென்று, அந்த வீட்டில் வசிக்கும் முதியவர்களை சந்திப்பதுடன், அந்த வீட்டில் ஏற்கனவே காவல்துறையால் வழங்கப்பட்டுள்ள புத்தகத்திலும் கையெழுத்து இட போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் மயிலாடுதுறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்களை மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா சந்தித்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மயிலாடுதுறை திருமஞ்சனவீதியில் வசிக்கும் காந்தி(72) செல்வகுமாரி(72) தம்பதியினரின் மகள் அமெரிக்காவிலும், மகன் சென்னையிலும் உள்ளதால் தம்பதியினர் இருவர் மட்டும் வீட்டில் தனியே உள்ளனர். அவர்களை சந்தித்த காவல் ஆய்வாளர் சுப்ரியா அவர்களுக்கு பழங்கள் வழங்கி நலம் விசாரித்ததுடன், வீட்டின் முன்பு இரவு நேரத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சப்தம் கேட்டால் கதவைத் திறக்க வேண்டாம் என்றும் பட்டா புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள காவல் நிலைய எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
வீட்டில் தனியே வசித்து வரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமில்லாமல், ஆறுதலாக பேசிச்சென்றது தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது என மூதாட்டி செல்வகுமாரி நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். இதேபோன்று, சீனிவாசபுரம் காமராஜர் தெருவில் வசிக்கும் லில்லி நகோமி(89) என்ற மூதாட்டியையும் காவல் ஆய்வாளர் சுப்ரியா சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மாவட்ட காவல்துறையின் இந்த முன்னெடுப்பு மூத்த குடிமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.