மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 45 ஆயிரத்து 568 வாக்காளர்கள் உள்ளனர். வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்ச உணர்வின்றி 100% வாக்களிக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஒடிசாவில் இருந்து துணை ராணுவ படையினர் இன்று வருகை தந்துள்ளனர். அசிஸ்டன்ட் கமாண்டன்ட் எம்.கே.சபார், காளி சரண் மாஜி ஆகியோர் தலைமையில் 176 பேர் மன்னம்பந்தலில் உள்ள வாக்கு என்னும் மையமான ஏவிசி பொறியியல் கல்லூரிக்கு வருகை தந்தனர்.
அசிஸ்டன்ட் கமாண்டன்ட் எம்.கே.சபார், காளி சரண் மாஜி ஆகியோருக்கு பொக்கே கொடுத்து சால்வை அணிவித்து அனைவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 860 வாக்குச்சாவடிகளில் உள்ள 50 பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு என்னும் மையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள காப்பரை, கொடி அணி வகுப்பு, ஜாதி மோதல்கள் கலவரங்கள் வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட உள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா இந்திய துணை ராணுவப்படையினர் தேர்தலில் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்து எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினார்.