சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு மட்டுமே தாக்கல் செய்துவிட்டு போனவர்தான். அவரை நாங்கள்தான் வெற்றி பெற வைத்தோம்:- கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லாவை மயிலாடுதுறையில் விமர்சித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி:-
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை அறிமுகப்படுத்தி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், அரசு கொறடா கோவி.செழியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். இதில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், 10 ஆண்டுகாலம் பாஜக கையில் ஆட்சியை கொடுத்ததால் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை இரண்டு முறை சந்திக்க வேண்டும். பாஜக 10 ஆண்டுகாலம் செய்த அநீதிகளையும், தமிழக முதல்வர் செய்த மக்கள் நல திட்டங்களையும் திண்ணை பிரச்சாரம் வாயிலாக வாக்களர்களிடம் கொண்டு சேர்த்து, இந்த தேர்தலில் பாஜகவையும், அதிமுகவையும் விரட்டி அடிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த தேர்தலில் மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் உள்ள தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 3 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். கூட்டம் நடப்பது உங்கள் இடமாக இருந்தாலும் நாங்கள்தான் அதிக அளவில் ஓட்டுக்களை பெறுவோம். இதேபோல் அதிகப்படியான ஓட்டுக்களை பெற நீங்களும் உழைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 19-ம் தேதி வரை நமது காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை மனசு கோணாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம். வெற்றிபெற்று வந்த பிறகு தொகுதி மக்களின் மனசு கோணாமல் சுதா பார்த்துகொள்ள வேண்டும். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற நினைவில் நாம் உழைக்க வேண்டும். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 30 பேர் வேட்பு மனுதாக்கல் செய்ததில் 13 மனு தள்ளுபடி செய்யப்பட்டு 17 பேர் களத்தில் உள்ளனர். எதிரிகளை சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. தின்ணை பிரசாரம் செய்து கை சின்னத்தை விளம்பரப்படுத்த வேண்டும். நம்முடைய பணி என்பது தேர்தல் பார்வையாளர்கள் 13 மனுவை தள்ளுபடி செய்ததுபோல் நம்முடைய வேலை காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை தவிர்த்து மற்ற 16 பேரை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற நோக்கில் பணியாற்ற வேண்டும்.
40-ஆவது வேட்பாளராக கடைசியாக அறிவிக்கப்பட்டாலும் முதலிடத்தில் அதிகப்படியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளராக சுதா இருப்பார். பிரதமர் மோடி தேர்தல் வருவதால் மகளிர் தினத்தையொட்டி கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைத்துள்ளார். தேர்தல் வந்தால் கிழவிகள் தினத்தைகூட மோடி கொண்டாடுவார். ஜனவரி மாதத்தில் இருந்து மோடி தமிழகத்திற்கு 7 முறை வந்துள்ளார். அவர் பேசும்போது திமுகவை ஒழிப்பேன் என்று சொன்னார். திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள்தான் அழிந்துபோய் இருக்கிறார்கள். வரலாறு தெரிந்துகொண்டு பிரதமர் மோடி பேசவேண்டும். தமிழகத்தில் இருந்து அமைச்சராக நமது தொகுதி வேட்பாளர் சுதா வரவேண்டும் அல்லது ஜோதிமணி அமைச்சராக வரவேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா பங்கேற்காத நிலையில், அவரை விமர்சிக்கும் வகையில் சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு மட்டுமே தாக்கல் செய்துவிட்டு போனவர்தான். அவரை நாங்கள்தான் வெற்றி பெற வைத்தோம் என பேசியது அக்கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.