மயிலாடுதுறை மாவட்டத்துக்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து திறப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த உடன் புறவழிச் சாலை பணிகள் தொடங்கும் - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. புதிய மாவட்டத்துக்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மயிலாடுதுறை பால்பண்ணை அருகே ரூ.114 கோடி திட்ட மதிப்பீட்டில் 7 மாடி கட்டடமாக உருவாகி வருகிறது. இப்பணிகளை தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பணிகள் முழுமை பெற்றவுடன், தமிழக முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து திறப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில் புறவழி சாலை அமைப்பதற்கான பணிகள், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த உடன் தொடங்கும் என தெரிவித்தார். முன்னதாக காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகளை நட்டுவைத்து தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.