மயிலாடுதுறையில் நூற்றாண்டுகளை கடந்த பழைமை வாய்ந்த தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உள்ளிட்ட பல தலைவர்களை உருவாக்கிய சிறப்புடையது. இப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் உருவப்படம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியாலும், கலைஞர் மு.கருணாநிதி உருவப்படம் பேராசிரியர் க.அன்பழகனாலும், பேராசிரியர் அன்பழகன் உருவப்படம் முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணியாலும் திறந்துவைக்கப்பட்ட பெருமைக்கு உரியதாகும். பள்ளியில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த இந்த தலைவர்களின் பழைய படங்கள் கட்டட சீரமைப்பு பணிக்காக அண்மையில் அகற்றப்பட்டது. இதையடுத்து, அந்த படங்கள் மீண்டும் பள்ளிச்சுவற்றில் பொருத்தப்பட்டு, அதன் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இதனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ திறந்து வைத்து பேசினார். இதில், நகராட்சி தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.