மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் அருகில் ஆனந்தன் என்பவர் டூவீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். நீர்நிலைகள் பராமரிப்பு, மரக்கன்றுகள் நடுதல், தெருக்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற சமூகப் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வரும் ஆனந்தன் கடந்த 6-ஆண்டுகளாக தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை கோடை காலத்தில் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100-நாட்கள் நீர்மோர் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டும் 7-வது ஆண்டாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை நகராட்சி தலைவர் செல்வராஜ், வணிகர் சங்கத் தலைவர் மதியழகன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர் மற்றும் சர்பத் போன்றவற்றை வழங்கினர். கடந்த ஆண்டு நீர்மோர் பந்தல் அரசியல் கட்சியினரால் தாமதமாக திறக்கப்பட்டது. இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறக்க எந்த அரசியல் கட்சியினர் கவனம் செலுத்தாத நிலையில் சமூக ஆர்வலர் ஆனந்தன் நீர்மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு வழங்கி வருவது வரவேற்பு பெற்றுள்ளது.