மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சென்னியநல்லூர் கிராமத்தில் உள்ள மகா பொன்னம்மா காளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா கடந்த மாதம் 29-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில், யாகசாலையில் மகா பூர்ணாஹூதி மற்றும் மகாதீப ஆராதனை காட்டப்பட்டு புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், கோயிலில் புதிதாக 23 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பொன்னம்மா காளி சிலைக்கும் மகாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.