தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் பாரம்பரியமான முறையில் பெருமாளுக்கு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திரு இந்தளூரில் 108 வைணவ திருத்தலங்களில் 22-வது ஆலயமும் காவிரி கரையில் பெருமாள் பள்ளி கொண்ட நிலைமையில் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கப்பட்டினம் வரிசையில் ஐந்தாவது அரங்கம் எனப்படும் பரிமள அரங்கமான இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று, பெருமாள் முன்பு தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
அதன்படி இன்று பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்திருளினார் அவர் முன்பு சோபகிருது ஆண்டின் பலன்கள், நவகிரகங்களில் இந்த ஆண்டின் ராஜா, மந்திரி, சிப்பாய் உள்ளிட்ட கிரகங்களின் அமைப்பு பலன்கள், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும், ராசிக்கும் கந்தாய பலன்கள், ஆதாய பலன்கள், விரைய பலன்கள், பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதை பட்டாச்சாரியார்கள் வாசித்துக் காண்பித்தனர்.
தொடர்ந்து பெருமாளுக்கு தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று அதைக் கேட்டால் வரும் துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம் என்பதால் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்