மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிஎன்ஜி கேஸ் பயன்படுத்தும் 900-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்த ஆட்டோக்களுக்கு சிஎன்ஜி கேஸ் பிடிப்பதற்கு மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்திலும், குத்தாலம் அருகே சேத்திராபாலபுரத்திலும் தனியார் (அதானி) குழுமத்தின் இரண்டு பெட்ரோல் பங்க்குகள் இயங்கி வருகிறது. இந்த பங்கில் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு அடிக்கடி ஏற்படுவது குற்றச்சாட்டை அவ்வப்போது எழுந்து கொண்டே தான் உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக சிஎன்ஜி கேஸ் கிடைக்காததால் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உங்கள் ஊரில் உங்கள் திட்டத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்தில் ஆய்வு நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவித்திருந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஆட்டோக்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக நாங்கள் மதியம் 2 மணி முதல் கொட்டும் மழையில் காத்திருந்தனர். முக்கிய அலுவல் பணி காரணமாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் மாவட்ட வருவாய் அலுவலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அதிகாரிகள் ஒருவரும் மனு அளிப்பதற்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர்களை கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர்கள் ஆர்டிஓ அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா போராட்ட இடத்திற்கு வந்து ஆட்டோ டிரைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிஎன்ஜி கேஸ் தொடர்ந்து கிடைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேஸ் தட்டுப்பாட்டால் ஒரு வாரமாக தொழிலுக்கு செல்லாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கேஸ் பிடிக்க வெளி மாநிலமான பாண்டிச்சேரி உள்ள காரைக்கால் மாவட்டத்திற்கு செல்லும் பொழுது தனி பர்மிட் போடவேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பர்மிட் இல்லாமல் செல்லும்போது அபராதம் கட்டவேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் ஆட்டோ டிரைவர்கள் வேதனை தெரிவித்தனர். பெட்ரோல் கிடைப்பது போன்று தங்கு தடையின்றி சிஎன்ஜி கேஸ் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் ஆட்டோ டிரைவர்கள் போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கச்சேரி சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.