மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்துவருகிறார். இவர் ஞானபீடம் அமர்ந்த நாளையொட்டி ஞானபுரீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், ருத்ர ஹோமம், ஆயுஷ் ஹோமம் ஆகியன நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் பூர்ணாஹூதியாகி கடங்கள் புறப்பட்டு ஞானபுரீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடைபெற்றது.
அதனையடுத்து குருமகா சந்நிதானத்திற்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 27-வது குருமகா சந்நிதானம் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர், துர்க்கை அம்மன் கோயில்கள் மற்றும் சொக்கநாதர் பூஜை மடத்தில் வழிபாடு செய்த பின்பு ஆதீனத்தில் உள்ள ஞானபீடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஞானபீடம் அமர்ந்தார்.
அதனைதொடர்ந்து அவருக்கு திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் மகா தீபாராதனை செய்து வழிபட்டார். ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. குருமகா சன்னிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது சபேச சிவாச்சாரியார் பணியை பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரம் பொற்கிழியை தருமபுரம் ஆதீனம் வழங்கி கவுரவித்தார். இதில் ஆதின கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.