இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. முன்னதாக தேர்தல் நடத்தை விதி முறைகள் கடந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்தது. அதன்படி மார்ச் 16-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்திய தேர்தல் ஆணையம் விலக்கிக் கொண்டது. அதைத் தொடர்ந்து செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீல் இன்று தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் தலைமையில் தேர்தல் நடத்தும் துணை வட்டாட்சியர் பாபு முன்னிலையில் சீல் அகற்றப்பட்டது.அதேப்போல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் வைக்கப்பட்டிருந்த சீலும் அகற்றப்பட்டது. நிகழ்வின் போது செம்பனார்கோவில் வருவாய் ஆய்வாளர் சசிகலா, கிராம நிர்வாக அலுவலர் திலக்ராஜ், கிராம உதவியாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகமும் இன்று திறக்கப்பட்டது.