மேட்டூர் அணை ஜுலை மாதம் திறக்கப்பட்டு தற்போது காவிரியில் தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளிலும் சம்பா, தாளடி சாகுபடிக்கு காவிரிநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக விவசாயிகள் வயலில் நாற்றங்காலை தயார் செய்து சம்பா, தாளடி பருவத்திற்கு ஏற்ற ஐஆர்20, கோ 50, கோ 46, 1009, வெள்ளைபொன்னி போன்ற நெல் ரகங்களை விதைவிடும் பணிகளை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா சேத்தூர் ஊராட்சியில் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்வதற்காக விதைவிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐஆர் 20, கோ 50 போன்ற நெல் ரகங்கள் விதைவிட்டு 28 நாட்களில் பறித்து நடவு செய்ய வேண்டும் என்றும் விதைவிட்டு ஒருசில நாட்களில் தண்ணீர் பாய்ந்து வயலை உழவு செய்து அண்டை வெட்டி, நடவு செய்வதற்கு தயார் படுத்த முடியும் என்பதால் சம்பா, தாளடி சாகுபடிக்கு பருவமழை தொடங்கும் வரையில் காவிரியில் முறைவைக்காமல் தங்கு தடையின்றி தண்ணீர் திறந்துவிட வேண்டும், தட்டுப்பாடு இன்றி மும்முனை மின்சாரமும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும். மேலும் சம்பா, தாளடிக்கு தொகுப்பு திட்டத்தை அறிவித்து உரிய நேரத்தில் உரம் மற்றும் இடுபொருட்களை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.