மயிலாடுதுறை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக கோயில் இடங்களில் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு மின் இணைப்பை தராமல் அலைக்கழித்து வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி, நகராட்சி மற்றும் மின்சார வாரியத்தையும், கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ராயர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் போராட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.துரைராஜ், மாவட்ட செயலாளர் விஜய், ஏ.ஐ.கே.எஸ் மாவட்ட தலைவர் சின்சன், மற்றும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மின்சாரதுறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மின்வாரியம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்து உறுதியளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று போராட்டக்காரர்கள் கூறியதால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருவாரூர் செல்லும் கச்சேரி சாலையில் செல்லும் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.