மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலயமானது அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் வைகாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு கடந்த 15-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கியது. பின்னர் தினசரி சுவாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இதனிடையே விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி உற்சவம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
காவேரிக் கரையில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் 16 அடி நீளம் அலகு குத்தியும், சக்தி கரகம் எடுத்தும் பக்தர்கள் தீ மிதித்த காட்சி காண்போரை பரவசம் அடையச் செய்தது. அதனை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருள மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.