சீர்காழி அருகே நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் மேற்கூரை இடிந்த விபத்து. நகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு. அதிகாரிகளுடன் பெற்றோர்கள் ஆவேசம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மதிய உணவிற்காக சமையலர் கலா உணவு தயார் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார். அப்பொழுது தலைமை ஆசிரியை அழைத்ததால் கலா சமையலறையை விட்டு வெளியே வந்துள்ளார். அந்த நேரம் திடீரென்று சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையல் உபகரணங்கள் சேதமடைந்தன. சமையலர் கலா வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
47 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமையலறை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று சமையல் கட்டிடத்தை நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளியில் கூடியிருந்த பெற்றோர்கள் அதிகாரிகளிடையே பலமுறை நகராட்சியில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, உயிர் சேதம் ஏற்ப்பட்டிருந்தால் என்ன செய்வது, பள்ளியை இழுத்து மூடுங்கள் பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கு பிள்ளைகளை படிக்க அனுப்பிவிட்டு காத்திருப்பதாக ஆவேசமாக அதிகாரிகளிடம் கேட்டனர்.
அப்போது துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு சமையலறை மற்றும் பள்ளிக்கட்டிடத்திற்கு ரூ.33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் தெரிவித்தனர். மேலும் தற்காலிகமாக சமையலறை அமைத்து தருவதாகவும் தெரிவித்தனர்.