சீர்காழி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவகுடி, கொண்டல், சட்டநாதபுரம் ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில் கழுமலை ஆறு வாய்க்கால் மற்றும் அகனி வாய்க்கால் சிறப்பு தூர்வாரம் திட்டத்தின் கீழ் 19.30 லட்சம் செலவில் தூர்வார்பட உள்ளதை முன்னிட்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தூர்வாரும் பணியை மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலில் முடிக்க வேண்டும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகத்திற்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் கொண்டல் அங்கன்வாடி பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கொண்டல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1.90 லட்சம் செலவில் நூலக கட்டிடத்தை பழுது பார்க்கும் பணியை பார்வையிட்டார்.
இதில் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், சரவணன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கனக சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.