ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோவிலில் 58-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

செய்திகள்

மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரம் கிராமத்தில் 58-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். குழந்தையை தோளில் தூக்கிக் கொண்டும் மற்றும் அலகு காவடி போட்ட பக்தர்கள், 16 அடி நீள அலகு குத்திய பக்தர்கள் தீக்குழியில் நடந்து வந்து தீ மிதித்தது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை சேர்ந்த கிராமமான  அச்சுதராயபுரம் கிராமத்தில் உள்ள‌ பிரசித்தி பெற்ற ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் 58- ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது‌.  கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றம், பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது.

அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மன் ரிஷப வாகனம், அன்னபட்சி வாகனம் மற்றும் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பாடாகி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி  மேளதாள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளங்கள் முழங்க வீதி உலாவாக கோவிலை வந்தடைந்தனர்.

கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதை தொடர்ந்து விரதம் இருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் குழந்தையை  தோளில் தூக்கிக் கொண்டும் மற்றும் அலகு காவடி போட்ட பக்தர்கள், 16 அடி நீள அலகு குத்திய பக்தர்கள் தீக்குழியில் நடந்து வந்து தீ மிதித்தது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இதில் கோவிலை சுற்றியுள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு தீபம் இட்டும் வழிபாடு செய்தனர். மேலும் விண்ணை முட்டும் கண்கவர் வாணவேடிக்கை பக்தர்களை பரவசபடுத்தியது.