ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோயிலில் 195-ஆம் ஆண்டு பிள்ளைக்கறி அமுது படையல் திருவிழா.

செய்திகள்

ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோயிலில் 195-ஆம் ஆண்டு பிள்ளைக்கறி அமுது படையல் திருவிழா. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் மடிப்பிச்சை பெற்று வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வளாகத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் சுவாமிக்கு சிறுதொண்ட நாயனார் பிள்ளைக்கறி அமுது படையல் இட்டதை போற்றும் வகையில் அமுது படையல் அன்னதான பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 195 வது ஆண்டாக இன்று பரணி நட்சத்திரத்தில் அமுது படையல் விழா நடைபெற்றது.


இவ்விழாவை முன்னிட்டு உத்தராபதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடன விநாயகர் ஆலயத்தில்‌ இருந்து மாவால் செய்யப்பட்ட பிள்ளை சீராளனை ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வந்தனர். வழி நெடுகிலும் பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். தொடர்ந்து கோயிலை மூன்று முறை சுற்றி வந்து மாவால் செய்யப்பட்ட பிள்ளை சீராளனை உத்திராபதிசுவரர் பாதத்தில் வைத்து சுவாமிக்கு அமுது படையல் இட்டனர். பின்னர் திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளை சீராளன் அருள்பிரசாதத்தை பெற்று உண்டால் அடுத்த வருடம் குழந்தை பேருகிட்டும் என்பது கோயிலின் ஐதீகம். திருமணமாகி நீண்ட வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் ஏராளமானோர் மண்டியிட்டு மடிப்பிச்சை பெற்று அதனை கோயில் வளாகத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கு அளித்தும் தானும் உட்கொண்டனர்.


இந்த அமுது படையல் விழாவில் நோயில்லா வாழ்வு உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உத்தராபதீஸ்வரரை தரிசனம் செய்து அமுது படையல் இட்ட உணவை பொறுமையுடன் காத்திருந்து உட்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *