மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தினம்தோறும் கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்தனர். அதேபோன்று, முற்பட்ட குறுவை நெல் சாகுபடி மற்றும் கோடைகால பயிரான பருத்தி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து இன்று குத்தாலம், கோமல், சிவனாகரம், கோடிமங்கலம், கோனேரிராஜபுரம், வைகல், ஆகிய பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மயிலாடுதுறை நகர்ப்பகுதிகளிலும் சிறிது நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவுகிறது.