மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வழுவூர் கிராமத்தில் ஸ்ரீ தாமரைகுள மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரை பெருவிழாவினை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழாவானது துவங்கியது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பால்குடம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காவிரிக்கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். ஊர்வலத்தில் காளியாட்டம் முன் செல்ல வயதான பக்தர் ஒருவர் சூலாயுதத்தை தொளில் சுமந்தபடி நடனமாடிய காட்சி பக்தர்களை பக்தி பரவசமடைய செய்தது. பின்னர் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.