மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தர்காடு காவிரிகரை பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஜூர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பழமையான இக்கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவிலில் திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டு, கடந்த 13 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசால பூஜை தொடங்கியது. அதனை தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் தினமான இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாளம் மற்றும் செண்டை மேளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து கோவிலின் விமான கும்பத்தை அடைந்தனர். வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத புனித நீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் மடாதிபதி 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.