மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எடமணல் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் தார் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி கிராமமக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். இந்த தொழிற்சாலை அமைந்துள்ள இடத்துக்கு அருகாமையில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் 3 எரிவாயு குழாய்கள் செல்வதால் எப்போது வேண்டுமானாலும் தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இந்த தொழிற்சாலையால் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படுவதுடன், ஆற்றுநீர் மாசுபடுதல், மாங்குரோவ் காடுகள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, கிராமமக்கள் அளித்த புகாரின்பேரில் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, மறுஉத்தரவு வரும்வரை தார் தொழிற்சாலையில் பணிகள் நடைபெறக் கூடாது என்று உத்தரவிட்டார். ஆனால், அந்த பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கிராம பிரமுகர் காசிபாலசுப்பிரமணியன், கலைவேந்தன் ஆகியோர் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் தொழிற்சாலையை மூடாவிட்டால், நடைபெறள்ள மக்களவைத் தேர்தலை எடமணல், திருநகரி, வேட்டங்குடி, திருமுல்லைவாசல் ஆகிய 4 ஊராட்சிகளைச் சேர்ந்த 30,000 வாக்காளர்கள் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தார்.