தேரழந்தூர் வேதபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

செய்திகள்

மயிலாடுதுறையை அடுத்த தேரழந்தூர் வேதபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழந்தூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த சௌந்தரநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. அகத்திய மாமுனிவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி செய்த சிறப்புக்குரிய இத்தலத்தில், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முன்னோர்களுக்கு 16-ஆம் நாள் காரியம் செய்யத் தவறியவர்கள் சாந்தி ஹோமம் செய்து இக்கோயிலில் உள்ள சிவனையும் அம்பாளையும் தரிசித்து 16 முறை சுற்றிவர 21 தலைமுறை தோஷ நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான இன்று காலை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தங்கள் தலையில் சுமந்து விமான கும்பத்தை அடைந்து, கோபுர கலசத்தில் புனித நீர் வார்த்து மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.