இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்பதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராடினார். 1913-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் தமிழர்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த தில்லையாடி வள்ளியம்மையும் ஒருவர். தனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டியவர் தில்லையாடி வள்ளியம்மை தான் என்று காந்தியடிகள் நினைவு கூர்ந்துள்ளார். 1913-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சிறையில் அடைபட்ட வள்ளியம்மை, 1914-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் உயிர்நீத்தார்.
காந்தியால் நினைவு கூறப்பட்ட தில்லையாடி வள்ளியம்மையின் 110-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கபட்டது. இதனை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள வள்ளியம்மை நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தனர். மேலும் செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தில்லையாடி வள்ளியம்மையின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.