மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவேள்விக்குடி கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பரிமள சுகந்த நாயகி சமேத மணவாளேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் திருமண தடை நீக்கும் ஸ்தலமாகவும், சிவராத்திரி சிறப்பு ஸ்தலமாகவும் திகழ்கிறது. சோழர்கால கட்டடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலின் திருப்பணி செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 29-ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 31-ஆம் தேதி யாகம் சாலை பூஜைகளும் தொடங்கின. இன்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தன.
தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி, சுவாமி, அம்பாள், நடராஜர் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.