மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில், கங்கை முதலான புன்னிய நதிகள் துலா மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவச்சுமைகளை போக்கிக் கொண்டதாக புராணம் கூறுகிறது. இதனை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரி ஆற்றில் சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதனால் இந்த பகுதி காவிரி துலாக்கட்டம் என்று அழைக்கப்படுகிறது. துலாக்கட்டத்தின் தென்கரையில் வலுவிழந்து இருந்த பக்கவாட்டுச்சுவர் அண்மையில் பெய்த மழையின் காரணமாக முற்றிலுமாக இடிந்து விழுந்தது.
இதனால், அப்பகுதியில் சாலை ஓரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. அவ்வழியாக ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் அதிகளவுக்கு சென்று வருவதால், அசம்பாவிதம் ஏதும் நேரிடும் முன்பாக சீர்செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின்பேரில் இடிந்து விழுந்த சுவற்றை புதிதாக அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பொக்லைன் இயந்திரம் கொண்டு, இடிந்துவிழுந்த சுவர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில், அங்கு கட்டுமானப்பணி தொடங்க உள்ளது.