நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்காக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரை இன்று அறிவித்ததை முன்னிட்டு மயிலாடுதுறையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இணிப்புகளுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பட்டாசு வெடித்து நூதன முறையில் மண்டியிட்டு சென்று வண்டிகாரதெரு பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் கட்சி வளர்ச்சியடைய வேண்டுதல்:-
நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்காக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரை இன்று அறிவித்ததை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் தாரை தப்பட்டை, ட்ரம்ஸ் வாத்தியங்கள் முழங்க விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழக வெற்றி கழகம் வாழ்க, டாக்டர் விஜய் வாழ்க, வருங்கால தமிழக முதல்வர் வாழ்க என்று முழக்கமிட்டவாறு மயிலாடுதுறை பேருந்து நிலைய வாயிலில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகளுடன் காக்கி சீருடைகளையும் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து செருப்பு தைக்கும் தொழிலாளிகள், பூ வியாபாரிகளுக்கு வேட்டிகளை வழங்கினர். விஜய் ரசிகர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வண்டிக்கார தெரு பிரசன்ன மாரியம்மன் ஆலயத்திற்கு வந்த விஜய் ரசிகர்கள் விஜய் படத்திற்கு சூடம் காண்பித்து சிதறுதேங்காய் உடைத்து மண்டியிட்டு ஆலயம் உள்ளே வந்து தங்களின் கட்சி வளர்ச்சி அடையவும் நடிகர் விஜய் வருங்கால தமிழக முதல்வராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். பின்னர் தந்தை பெரியார், அம்பேத்கர், காமராஜர், உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.