இறால் குட்டை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு. குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் என வேதனை. பணிகள் தொடர்ந்தால் அரசு அடையாள அட்டைகளை ஒப்படைப்போம் எனவும் அறிவிப்பு.

செய்திகள்

சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இறால் குட்டை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு. குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் என வேதனை. இறால் குட்டை பணிகள் தொடர்ந்தால் அரசு அடையாள அட்டைகளை ஒப்படைப்போம் எனவும் அறிவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உப்பனாற்றின் கரையோரம் அமைந்துள்ள வெள்ளபள்ளம் கிராமத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இறால் குட்டைகளால் நிலத்தடி நீர் முழுவதுமாக பாதிக்கப்பட்டு உப்பு நீராக மாறியது. இதனால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்ணீரைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு கட்ட போராட்டங்களைத் தொடர்ந்து சுற்றியுள்ள இறால் குட்டைகள் அகற்றப்பட்டதால் நிலத்தடி நீரின் தன்மை தற்பொழுது மாறி வருகிறது.

இந்நிலையில் வெள்ளப்பள்ளம் கிராமத்தின் அருகிலேயே புதிதாக இறால் குட்டை அமைக்கும் பணியை தனியார் ஒருவர் தொடங்கியுள்ளார். அரசுத்துறை அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்து அவர் பணிகளை தொடங்கிய நிலையில் அதற்கு வெள்ளப்பள்ளம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தற்போதுதான் நிலத்தடி நீரை  குடிநீராக பயன்படுத்த முடியாவிட்டாலும் மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தும் நிலைக்கு மாறி உள்ளது. இந்த நேரத்தில் புதிய இறால் குட்டைகள் துவங்குவதால் மீண்டும் நிலத்தடி நீரின் தன்மை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அடுத்தடுத்த கிராமங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. மீண்டும் கிராமத்தில் இறால் குட்டை அமைத்தால் சுற்றுவட்டார பகுதி முழுவதுமே நிலத்தடிநீர் பாதிக்கப்படும். எனவே உடனடியாக இறால் குட்டை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இறால் குட்டை பணிகள் தொடருமானால் தங்களுடைய அரசு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விடுவோம் எனவும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *