மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தொடர்ந்து பிரதான கட்சிகள் உட்பட 17 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் காண்கின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே வள்ளாலஅகரம் ஊராட்சியில் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி துவக்கி வைத்தார். தொடர்ந்து தகவல் சீட்டினை வழங்கி பொதுமக்களிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 45 ஆயிரத்து 568 வாக்காளர்கள் உள்ள நிலையில் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதிக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கிட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாகவும், தொடர்ந்து அதிகாரிகள் மூலம் விரைந்து வாக்காளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார்.