அரசு பள்ளிகளுக்கு பல லட்சங்களில் நலத்திட்டகள் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்!
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலை அடுத்த புங்கனூர் கிராமத்தில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக அருணாசலம் என்பவர் பணியாற்றி வருகிறார். இயல்பாகவே ஏழை, எளிய மக்களுக்கு உதவும் குணம் கொண்ட இவர், தான் கல்வி போதிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கணினி உபகரணங்கள், நோட்புக், பேனா உள்ளிட்ட உதவிகளையும், மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் இடர்பாடுகளில் சிக்கிய மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட உதவிகளையும் வழங்கிவருகிறார்.
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என எண்ணிய அவர் அமெரிக்கா வாழ் இந்தியரான தனது நண்பர் மோகன் சுதிருடன் இணைந்து சுமார் 10 லட்சம் ரூபாய் நிதி திரட்டி தற்போது 8 அரசு பள்ளிக்கு தலா 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கியுள்ளார். அதேபோன்று இரண்டு மருத்துவமனைகளுக்கு கட்டில், மெத்தை, சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவைகளையும் வழங்கியுள்ளார். அதற்கான நிகழ்வு புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பள்ளி மற்றும் மருத்துவமனைக்கான உதவிகளை அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில் சீர்காழி வட்டார கல்வி அலுவலர் பூங்குழலி மற்றும் நாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா பேகம் வஜுருதீன், பள்ளி தலைமையாசிரியர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் அருணாசலம் கூறுகையில், அரசுப்பள்ளி மாணவர்கள் பலரும் சுகாதாரமான குடிநீர் அருந்தாமல் நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருவதை ஒரு அறிவியல் ஆசிரியராக உணர்ந்தேன்.
அதனைத் தொடர்ந்து என்னால் முடிந்த அளவிற்கு அரசு பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்க வேண்டும் என முடிவெடுத்து தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டு முதற்கட்டமாக இந்த பத்து பள்ளிகளுக்கும், படிப்படியாக மேலும் பல பள்ளிகளுக்கு இதனை செய்ய உள்ளேன் எனவும்,
இதேபோன்று கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் அரசு மருத்துவமனைகளுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், கட்டில், மெத்தை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கவும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசு பள்ளி ஆசிரியரின் இத்தகைய செயல் பலரது பாராட்டைய பெற்று வருகிறது.