மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருமஞ்சனவீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவரின் மகன் தீபக். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது மாப்படுகை ரயில்வே கேட் அருகே உள்ள தனது தந்தையின் மீன் கடையில் தனது தந்தைக்கு உதவியாக மீன் வெட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை இவர் வழக்கம்போல தனது தந்தையின் கடையில் மீன் வெட்டி கொடுத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரோந்து போலீஸார் ராமமூர்த்தி கடையில் கஞ்சா வைத்திருப்பதாக கூறி ஆய்வு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த தீபக் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து தீபக் கூறுகையில், தனக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாகவும், தான் கஞ்சா விற்பனை செய்வது கிடையாது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மயிலாடுதுறை காவல்துறையினர் தன்மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி அவர்களாக கஞ்சாவை எடுத்து வந்து நான் வைத்திருத்தாக கூறி வழக்கு போடுவதும், என்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் தனது தந்தையின் கடையில் வியாபாரம் பாதித்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
அதனால் காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதால் தான் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். மயிலாடுதுறையில் காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக கூறி இளைஞர் ஒருவர் தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.